செய்திகள்

கூலி உயர்விற்கு முட்டுக்கட்டை

கூலி உயர்விற்கு முட்டுக்கட்டை

தொழில் வர்த்தக சபை மீது
தொழிலாளர்கள் அதிருப்தி
 
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு பொள்ளாச்சி தொழில் வர்த்த சபை முட்டுக்கட்டை போட்டதால் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரம், சுற்றுவட்டார கிராமங்கள், ஆனைமலை தாலுகா, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலாசு தொழிலாளர் எனப்படும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். வர்த்தக நிறுவனங்களுக்கும் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கூலி வழங்குவதில் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன.
கடந்த 1981ம் ஆண்டு பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை ஏற்படுத்தப்பட்டது. வர்த்தக நிறுவனங்களுக்கும் பாரம் தூக்கும் தொழிலாலர்களுக்கும் இடையே ஏற்படும் பிச்னைகளில் தொழில் வர்த்தக சபை தலையிட்டு சமரசம் செய்து வந்தது. பல நேரங்களில் கூலி தொடர்பான பிரச்னை தீர்க்கப்படாமல் பெரும் தலைவலியாகவே இருந்தது. இந்நிலையில் 1990ம் ஆண்டு வாக்கில் வர்த்தக நிறுவனங்களின் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தொழில் வர்த்தக சபை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி கூலியை நிர்ணயம் செய்து கொள்வது என்று முடிவு செய்தது.
அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வர்த்தக நிறுவனங்கள் சார்பில் தொழில் வர்த்தக சபை, பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடந்த இறுதி பேச்சுவார்த்தை முடிவின்படி 3 ஆண்டுகால கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியுடன் முடிவடைந்தது.
ஒப்பந்தகாலம் முடிந்து 3 மாதங்கள் முடிவடையும் நிலையில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு தொழில்வர்த்தக சபை முன்வரவில்லை. விரைவில் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் கொரோனாவால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் கூலி உயர்வு தொர்பான பேச்சுவார்த்தை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக தொழில் வர்த்தக சபை அதிரடியாக அறிவித்தது தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்புடுத்தியுள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி பிங்கி நாகராஜ் என்பவர் கூறுகையில், தானியங்கள், கட்டுமான பொருட்கள், பர்னிச்சர்கள், கண்ணாடி, பிளைவுட் என  பொள்ளாச்சி வட்டாரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மூட்டைகள் இறக்கப்படுகின்றன. உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் நாளுக்கு நாள் விலைகள் உயர்ந்து கொண்டே வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஊதியத்தை பெற்றுவந்த தொழிலாளர்கள் கூலியை உயர்த்த பேச்சுவார்த்தை விரைவில் துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் கருதி
தொழிற்சங்கங்களும் இதே கோரிக்கையை தொழில் வர்த்தக சபையிடம் வலியுறுத்தினோம். ஆனால் பேச்சுவார்த்தை ஓராண்டுக்கு இல்லை என்று தொழில் வர்த்தக சபை எடுத்துள்ள முடிவு பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு மேலும் பாரத்தை கொடுத்துள்ளது. என்றார்.
பாரம் தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், தொழில் வர்த்தக சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தச் செல்லும் தொழிற்சங்க நிர்வாகிகளும் விலை போய் விடுகின்றனர். இதனால் நாங்கள் கேட்கும் நியாயமான கூலியே எங்களுக்கு கிடைப்பதில்லை. இதில் கூலி உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பது என்ற முடிவு தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதாகும். கொரோனாவால் வர்த்தகம் பாதித்துள்ளது என்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அந்த நிலை படிப்படியாக மாறி தற்போது வர்த்தகம் சீரடைந்துள்ளது என்பதையும் தொழில் வர்த்தக சபை ஒத்துக்கொள்ள வேண்டும்.
கூலி உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். தாமதப்படுத்த நினைத்தால் போராட்டத்தில் இறங்குவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button