30 ஆண்டுக்கு பின்
நிரம்பும் கோதவாடி குளம்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட கோதவாடி கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோதவாடி குளம். இந்த குளத்தில் சேமிக்கப்படும் மழைநீர் மற்றும் பி.ஏ.பி கால்வாய் மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வந்தன.
ஆனால் கடந்த 1991ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீரின்றி இந்த குளம் வறண்டு காணப்பட்டது. ஆழியாறு அணையிலிருந்து பிஏபி கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் உபரி நீரை இந்த குளத்திற்கு திருப்பிவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் உத்தரவுப்படி பி.ஏ.பி. கால்வாயின் உபரி நீரை கோதவாடி குளத்திற்கு வழங்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கோதவாடி குளம் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. மேலும் பரவலாக மழை பெய்து வருவதாலும் குளம் விரைவில் நிரம்பும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இத்தகவல் அறிந்த மாநில திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி கோதவாடி வந்து குளத்தை பார்வையிட்டார். கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர்.வரதராஜன், ஒன்றிய பொறுப்பாளர் செட்டியக்காபாளையம் துரை, மாநில சுற்றுச்சூழல் அணியின் துணை செயலாளர் மணிசுந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.