குடிசை அமைக்க எதிர்ப்பு
வனத்துறை அதிரடியால்
மலைவாழ் மக்கள் அதிர்ச்சி
அரசு வழங்கிய நிலத்தில் மலைவாழ் மக்கள் அமைத்த குடிசைகளை வனத்துறையினர் அதிரடியாய் அப்புறப்படுத்தியதால் வால்பாறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரக ங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் வனச் சட்டப்படி தங்களின் வாழ்வாதாரத்திற்காக உரிய இடங்களை ஒதுக்கி பட்டாவும் வழங்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வால்பாறையை அடுத்த கல்லார்குடி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு வனப்பகுதியில் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது. 21 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான பட்டாவும் வழங்கப்பட்டது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மலைவாழ் மக்கள் மூங்கில் மற்றும் தென்னங்கீற்று ஆகியவற்றைக் கொண்டு குடிசைகளை அமைத்தனர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி மலைவாழ் மக்கள் அமைத்திருந்த குடிசைகளை அதிரடியாக அப்புறப்படுத்தினர். இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற மலைவாழ் மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதை கண்டுகொள்ளாத வனத்துறையினர் அப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனையடுத்து மலைவாழ் மக்களின் குடிசைகளை சேதப்படுத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொள்ளாச்சி சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவை கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மலைவாழ் மக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதப்படுத்தப்பட்ட குடிசைகளை அதே இடத்தில் புதுப்பித்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.