ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நான்கு வனச்சரக பகுதிகளிலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட விலங்குகளும் ஏராளமான பறவை இனங்களும் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட இந்த வனத்தையும், அங்குள்ள வனவிலங்குகளையும் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.
இதில் ஆண்டுதோறும் புலிகள் மற்றும் அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என தனித்தனியே கணக்கெடுப்புகள் நடத்தப்படும். வன விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைகிறதா என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த கணக்கெடுப்பு உதவுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி இன்று (5ம் தேதி) தொடங்கி வருகிற 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமையில், வனச்சரகர்களான மணிகண்டன், புகழேந்தி, காசிலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என மொத்தம் 240 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இக்கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பு வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் நடைபெற்றது. கணக்கெடுப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள் 32 பீட்டுகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் 64 நேர்கோட்டு பாதைகள் பிரிக்கப்பட்டு அந்த வழித்தடங்களில் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். எச்சம், காலடி தடங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.