தேசிய தரச்சான்றுக்கு
அரசு மருத்துவமனையில் ஆய்வு
தேசிய தரச்சான்று பெற பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ஒதுக்கப்பட்ட நிதியில் கூடுதல் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு உயர் சிகிச்சைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றும், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னையிலிருந்து வந்த மருத்துவக்குழுவினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் அசோகன், ராஜமோகன் மற்றும் செவிலியர் அனுசுயா ஆகியோர் கொண்ட குழு பல்வேறு வார்டுகளிலும் ஆய்வுகளை நடத்தினர்.
இந்த ஆய்வு குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு மத்திய குழுவினர் வந்து ஆய்வு செய்வார்கள்.
அந்த குழுவினர் ஆய்வு அறிக்கையின் முடிவின்படி இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்படும்.
தேசிய தரச்சான்றிதழ் பெறுவதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து ஒரு படுக்கைக்கு ரூபாய் 10 ஆயிரம் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். அதன்மூலம் மருத்துவமனையை மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.