பொதுக் கழிப்பிடத்துக்கு பூட்டு
மாஜி கவுன்சிலர் மகன் மீது புகார்
பொள்ளாச்சி நகரில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை மாஜி கவுன்சிலரின் மகன் பூட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியின் 7வது வார்டுக்குட்பட்ட தாட்கோ காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் நகராட்சி சார்பில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் என்பவரின் மகன் கிருஷ்ணகுமார் திடீரென்று தனது நண்பர்களுடன் வந்து அங்கு பணியில் இருந்த சுகாதாரப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு பொதுக் கழிப்பிடத்தை பூட்டிச் சென்று விட்டார். இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் கூலி வேலைக்குச் செல்வோர் கழிப்பிடம் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அன்றாட காலைக்கடனை கழிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளரிடம் பொது கழிப்பிடத்தை பூட்டிவிட்டு சென்ற மாஜி கவுன்சிலர் மகன் மீது நடவடிக்கை எடுத்து, பொதுக் கழிப்பிடத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ஆணையாளர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக சப் கலெக்டரிடமும் புகார் மனு அளித்தனர்.