மாணவர்களின் டி.சி.யில் கடனாளிகள் என குறிப்பிட எதிர்ப்பு
நிலுவை கல்விக் கட்டணத்தை டி.சி.யில் குறிப்பிட மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களில் பள்ளிக் கட்டணம்
முழுமையாகச் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் அவர்களின்
பாக்கித்தொகையைக் குறிப்பிடலாம் என்றும் அதற்கான வரிசையை தமிழ் நாடு அரசு
பள்ளிக் கல்வித்துறை தனது பிரத்யோக வலைத்தளத்தில் உள்ள மாற்றுச் சான்றிதழ்
படிவத்தில் உருவாக்கிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
வழக்கை தொடுத்த தனியார் பள்ளி நிர்வாகங்களின் கூட்டமைப்பினர், எதிர்
மனுதாரராக அரசை மட்டுமே குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவால் நேரடியாக பாதிக்கப்படக் கூடிய மாணவர், பெற்றோர் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் யாரையும் எதிர் மனுதாரராக இணைக்கவில்லை.
பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய மாணவர், பெற்றோர் தரப்பு வாதங்களைக் கேட்காமல்
சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மாற்றுச் சான்றிதழ் ஒரு குழந்தையின் கல்வியியல் செயல்பாடு குறித்தான
ஆவணம். அதில் கட்டண பாக்கியை குறிப்பிடுவது எந்த வகையிலும் நியாயமான
அணுகுமுறை ஆகாது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் கட்டணத்தை கட்டாமல்
ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பது கிடையாது. வேலை இழப்பு, தொழில் நலிவடைதல் உள்ளிட்ட
காரணங்களால் பொருளாதார நெருக்கடிக்குள்ளான பெற்றோர், தொடர்ந்து கட்டணம் செலுத்த வாய்ப்பு இல்லை என்பதால்தான் கட்டணம் குறைவாக உள்ள அல்லது கட்டணமற்ற பள்ளிகளில் குழந்தையை சேர்க்க மாற்றுச் சான்றிதழ் கோருகின்றனர்.
தீடிரென்று பள்ளி மாறும் போது குழந்தைக்கு ஏற்படும் மன உளைச்சல் உள்ளிட்ட சிக்கல்களையும் தெரிந்துதான் வேறு வழி இல்லாமல் மாற்றுச் சான்றிதழ்
கோருகின்றனர்.
குழந்தையின் பரிதாபத்துக்குரிய நிலையை உணர்ந்து அதற்கு உரிய சான்றிதழை வழங்கி, அந்த மாணவரின் கல்வியைத் தொடர முன்வராமல், மாற்றுச் சான்றிதழில் “கல்விக் கடன் வைத்துள்ள மாணவர்” என்று முத்திரை குத்தி அனுப்புவது பள்ளிகள் செய்யக் கூடிய செயல் அல்ல.
கட்டணம் முழுவதுமாகச் செலுத்தாத மாணவர் என்ற குறிப்பு, வேறு பள்ளியில்
சேரும் போது ஒரு குழந்தை எதிர் கொள்ளும் சிக்கல்களுடன், எதிர் காலத்தில் அவரின்
உயர் கல்விக் கடன், வேலைவாய்ப்பு, சுயதொழில் முனைவது உள்ளிட்ட அனைத்து
நிலையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைப் பருவத்தில் தனது பெற்றோர் அல்லது பாதுகாவலர் செய்த தவறுக்காக, பெரியவர் ஆனபிறகு, தான் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு
தள்ளப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.
குழந்தை உரிமைக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். அதற்கு முன்னர் அரசின் வலைத்தளத்தின் மாற்றுச் சான்றிதழ் படிவத்தில் கட்டண பாக்கி தொடர்பாக எந்த திருத்தத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளக் கூடாது. மேல் முறையீடு
நடைமுறையை அரசு மேற்கொள்வதால், தனியார் பள்ளிகள் தாங்களாகவே மாற்றுச்
சான்றிதழில் கட்டண பாக்கியை குறிப்பிடக்கூடாது என்பதை தனியார் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.