ஒன்றரை வயது குட்டி யானை உயிரிழப்பு
வால்பாறையில் தனியாருக்குச் சொந்தமான
எஸ்டேட் ஒன்றில், உடல் நலம் குன்றியிருந்த ஒன்றரை வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பி.பி.டி.சி. எனும் தனியாருக்குச் சொந்தமான தோணிமுடி எஸ்டேட்டில் கடந்த 2 நாட்களாக ஒன்றரை வயது குட்டி ஆண் யானை ஒன்று சுற்றித் திரிந்தது.
யானைகள் தங்கள் கூட்டத்திலிருந்து விட்டுச் சென்றதால் உடல் நலம் சரியில்லாமல் அந்த குட்டி யானை தனியாக சுற்றித்திரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினர் மூலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உடல்நலம் குன்றிய அந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை வனத்துறையினர் சிகிச்சை அளிக்க சென்ற போது அந்த குட்டி யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்ததும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், அட்டகட்டி வன ஆய்வக மேலாண்மை இயக்குனர் செல்வம், வால்பாறை மற்றும் மாணாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கால்நடை மருத்துவர் சுகுமாரன் வந்து குட்டி யானையை பரிசோதித்து உடல் நல குறைவாலேயே இருந்துள்ளது என்பதை உறுதி செய்தார். அதன் பிறகு உடற் கூறாய்வு செய்து அதே பகுதியில் அந்த குட்டி யானையின் உடல் புதைக்கப்பட்டது.
செய்தியாளர் கருப்பசாமி, வால்பாறை.