மனித வன உயிரின மோதலை தடுக்க புதிய ‘செயலி’
மனித வன உயிரின மோதலை தடுக்க வனத்துறை சார்பில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மனித வன உயிரின மோதல் தடுப்பு மற்றும் காட்டு யானைகளால் குடியிருப்புகள் சேதப்படுத்துதலை தவிர்ப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குனர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் இயற்கை வன ஆர்வலர் கணேஷ் ரகுநாதன், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட எஸ்டேட் நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் கூறுகையில், எஸ்டேட் நிர்வாகத்திற்கு உட்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிர்வாக குடியிருப்புகளுக்கு வயது முதிர்ந்த நபர்களை பணியமர்த்தக் கூடாது, பணிக்கு சென்று வரும் தொழிலாளர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பின்றி வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
எஸ்டேட்டுக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்கு அமைத்துத்தர எஸ்டேட் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
எஸ்டேட் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் ரேசன் கடைகளைச் சுற்றி சூரிய மின் வேலி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
துணை இயக்குநரின் அறிவுரைப்படி ‘எலிபன்ட் செல்’ என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் பொழுது அத்தகவலை
செயலியில் பதிவிடும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனித வன உயிரின மோதல் நடைபெறும் பட்சத்தில் வனத்துறை மூலம்
வழங்கப்படும் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக சமந்தப்பட்டவரிடம் உரிய ஆவணங்களைப் பெற்று வனச்சரக அலுவலகத்தில் காலதாமதமின்றி சமர்ப்பிக்க எஸ்டேட் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மனித வன உயிரின மோதல் தடுப்புப் பணிகளில் தனியார் தேயிலைத் தோட்ட
நிர்வாகத்தினர் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.