சட்டம் சாமானியருக்கே
அரசு அதிகாரிகள் அலட்சியம்
விளம்பர பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வளவு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் சட்டம் சாமானியருக்கே என்ற ரீதியில் போலீசாரும், அரசு அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரம் புற்றீசல் போல் பெருகி இருந்தது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்களும், வாழ்த்துகிறோம், இரங்கல் தெரிவிக்கிறோம் என்ற பெயரில் பொதுநல அமைப்புகளும், தனி நபர்களுமே இந்த பேனர் கலாச்சாரத்தில் மூழ்கினர்.
போக்குவரத்து நெரிசலையும், வாகன ஓட்டிகளையும், பாதை சாரிகளையும் கண்டுகொள்ளாமல் விதிகளுக்குப் புறம்பாக விளம்பர பேனர்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டன. உச்சபட்சமாக பல இடங்களில் உயிர்களைக் காவு வாங்க காரணமாக இருக்கிறது என்று தெரிந்தும் விளம்பர பேனர்கள் வைப்பது குறைந்தபாடில்லை.
இவ்விவகாரத்தில் நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு விளம்பர பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளில் பலரும் இன்றுவரை மெத்தன போக்கிலேயே செயல்படுகின்றனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும் அதனை ஒட்டிய சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சி பகுதிகள், ஆனைமலை முக்கோணம், வேட்டைக்காரன்புதூர், அம்பராம்பாளையம் சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றுவரை விளம்பர பேனர் வைப்பதில் எந்தவித கெடுபிடியும் இருப்பதில்லை.
வாழ்த்து தெரிவித்தோ அல்லது இரங்கல் தெரிவித்தோ சாதாரணமானவர்கள் வைக்கும் விளம்பர பேனர்களை மட்டும் அதிரடியாக அகற்றும் போலீசாரும், அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வைக்கும் விளம்பர பேனர்கள் மீது கை வைக்க தயக்கம் காட்டுகின்றனர்.
மீண்டும் ஒரு அசம்பாவிதமோ அல்லது உயிரிழப்போ இப்பகுதியில் ஏற்பட்டால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.