குப்பையால் அவதி : குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மட்டுமின்றி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த குப்பைகளில் இருந்து எழும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள அம்மாபாளையம் பேருந்து நிலையம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும், தனியார் தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்