பள்ளி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: திருமணமான வாலிபர் கைது
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அச்சிறுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் ஒருவரது குடும்பத்தாரும், பள்ளி மாணவியின் குடும்பத்தாரும் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வாலிபர் சிறுமியுடன் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அச்சிறுமியின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். களும் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து, ஆனைமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர், சிறுமிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியது தெரியவந்தது.
ஆனைமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் அந்த வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.