மாநில அளவிலான பெண்கள் கபடி
கோவை அணி வெற்றி
பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியில் கோவை கே.பி.ஆர். மில்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.
பொள்ளாச்சி சாம்ராட் கபடி குழு சார்பில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி வளாகத்தில் மின்னொளியில் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருநெல்வேலி, சென்னை, திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 அணிகள் கலந்து கொண்டன.
இதில் எஸ்.எம்.வி.கே.சி. ஒட்டன்சத்திரம் அணியும் கே.பி.ஆர். மில்ஸ் கோவை அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தலா 27 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன. இதனையடுத்து நடத்தப்பட்ட டை பிரேக்கரில் இரு அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்று சமநிலையிலேயே இருந்தன.
அணி நடுவர்களின் முடிவின்படி டாஸ் போடப்பட்டு கோல்டன் ரைடு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கே.பி.ஆர். மில்ஸ் கோவை அணி கூடுதலாக இரண்டு புள்ளிகள் பெற்று வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அணி, 2 மற்றும் 3ம் இடம் பிடித்த அணிகளுக்கு கோப்பைகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. சிறந்த வீரர்களுக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் செயலாளர் வெங்கடேசன் வழங்கினார். சாம்ராட் கபடி குழு தலைவர் உதயகுமார் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.