மூதாட்டி ஒப்படைத்த துப்பாக்கி: கலக்கத்தில் போலீசார்
பொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்ததாக கூறி மூதாட்டி ஒருவர் ஒப்படைத்த துப்பாக்கியால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி என்றாலே பாலியல் வழக்கும், சமீப காலமாக அதிகரித்து வரும் போக்சோ வழக்குகளும் போலீசாரின் இமேஜை டேமேஜ் செய்து வருகின்றன.
இந்நிலையில் மூதாட்டி ஒருவர் ரோட்டில் கிடந்ததாகக் கூறி கைத்துப்பாக்கி ஒன்றை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நேர்மையான போலீஸ் ஒருவர் கூறியதாவது, கோவையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது மகளைப் பார்க்க பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி கோவை ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றின் அருகே நடந்து வந்த போது ரோட்டின் ஓரத்தில் துப்பாக்கி ஒன்றும் இரு கை உறைகளும் இருந்ததாகக் கூறி மூதாட்டி அதனை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
அந்த கைத்துப்பாக்கி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரகமாகும். அதில் தோட்டாக்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக டி.எஸ்.பி. தமிழ்மணி தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சிக்கு கூலிப்படையினர் யாரேனும் வந்துள்ளார்களா?, கொள்ளையர்கள் யாரேனும் விட்டுச் சென்றதா? கொலை செய்யும் நோக்கில் யாரேனும் வந்துள்ளார்களா அல்லது வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு அந்த கைத்துப்பாக்கியை இங்கே கொண்டு வந்து போட்டார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.