கல்வி கற்க காத்திருக்கும் சிறுமி
கருணை காட்டாத தனியார் பள்ளி
கட்டணத்தில் மட்டும் குறியாக இருக்கும் கருணை இல்லாத தனியார் பள்ளியால் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமி தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாதது குறித்து பொள்ளாச்சி சப் கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் நிர்வாகி மகாலிங்கம் தலைமையில் பள்ளிச் சிறுமி அவரது உறவினர் மற்றும் அவர்களது நண்பர்கள் என பலரும் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
இதுகுறித்து மகாலிங்கம் கூறுகையில் பொள்ளாச்சி கோட்டாம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் சிறுமி ஒருவரது பெற்றோர் விபத்தில் உயிரிழந்தனர். அச்சிறுமியை அவரது தாத்தா, சித்தி போன்ற உறவினர்களே பராமரித்து வருகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு படிக்க வேண்டிய அந்த சிறுமி இதுநாள்வரை பள்ளி சென்று பாடம் கற்க முடியாமல் தவித்து வருகிறார். கூலிவேலை செய்து வருவதால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே சிறுமிக்கு செலுத்த முடியும் என்று அவரை பராமரித்து வருவோர் தெரிவித்துள்ளனர். ஆனால் கொஞ்சம் கூட கருணை இல்லாத தனியார் பள்ளி நிர்வாகம் தாங்கள் கூறும் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கறாராக இருந்து வருகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் வரை புகார் மனு கொடுத்தும் அந்த சிறுமிக்கு கல்வி கற்பிக்க பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை. மேலும் அந்தப் பள்ளியின் நிர்வாக அலுவலர் சிறுமியின் பாதுகாவலர்களிடம் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்.
ஆகவே இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த சிறுமியின் பள்ளிப்படிப்பைத் தொடர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம். இதன் பிறகாவது அந்த சிறுமியின் கல்விக் கனவு நனவாகும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.