மாணவிகளுக்கு கொரோனா தொற்று
அரசு பள்ளி முற்றுகை
மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவிய நிலையிலும் தொடர்ந்து செயல்பட்டு வந்த அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகரில் உள்ள நேதாஜி ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த மாணவிகளுக்கு மட்டும் விடுப்பு அளித்து பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பியது. கடந்த இரண்டு நாட்களாக பிளஸ்-2 மாணவிகளில் பலருக்கும் கடும் காய்ச்சல் இருந்துள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் தொடர்ந்து பள்ளியை செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் பலர் பள்ளியை முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பள்ளிக்கு வந்தார். பள்ளிக்கு வந்துள்ள மாணவிகள், அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவரங்களை அவர் கேட்டபோது பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பிற ஆசிரியைகள் உரிய பதில் அளிக்கவில்லை. மேலும் பள்ளிக்கு வரும் மாணவிகளை உரிய சோதனைகள் நடத்தி அனுமதிக்கிறீர்களா என்று அவர் கேட்ட போது தலைமை ஆசிரியை கோமதி திடீரென மயக்கமுற்று கீழே விழுந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், பள்ளி வளாகம் முழுவதும் கிருமி
நாசினி தெளிக்கப்பட்டு உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்தும், பள்ளியின் தற்போதைய சூழல் குறித்தும் உயர் அதிகாரிகளிடமும் பெற்றோரிடமும் கலந்துபேசி பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.