7 தமிழர்கள் விடுதலை
இமாம் கவுன்சில் வலியுறுத்தல்
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில பொதுக்குழு கூட்டத்தில் 7 தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் மாநில தலைவர் ஷம்சுல் இக்பால் தாவூதி தலைமையில் நடந்தது. இதில் புதிய மாநில தலைவராக மௌலவி டாக்டர். ஆபிருத்தீன் மன்பஈ, மாநில துணைத் தலைவர்களாக ஷம்சுல் இக்பால் தாவூதி, அப்துர் ராஸிக் பாகவி ஆகியோரும், மாநில பொதுச் செயலாளராக அர்ஷத் அஹ்மது அல்தாஃபி, மாநில செயலாளர்களாக மௌலவி முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி, மௌலவி முஹம்மது ஷுஐப் பைஜி, மௌலவி முஹம்மது அப்துல்லாஹ் உள்ளிட்டோர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய மாநில நிர்வாகிகளாக
தேர்வு செய்ப்பட்டனர்.
இக்கூட்டத்தில் 1991 மத வழிபாட்டு பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவு சொத்துக்களை வைத்துள்ள வக்பு வாரியத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும், 7 தமிழர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.