வீட்டின் அருகே நாகப்பாம்பு
போராடி பிடித்தது தீயணைப்புத்துறை
பொள்ளாச்சியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 8 அடி நீள நாகபாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.
பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ளது சோமசுந்தரம் லே அவுட். இப்பகுதியில் வசிக்கும் சுஜித் குமார் என்பவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது நீளமான பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக வனத்துறைக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சுஜித்குமார் வீட்டிற்கு அருகே இருந்த சுமார் 8 அடி நீளம் உள்ள நாகப்பாம்பை நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் பிடித்தனர். பிடிபட்ட பாம்பை பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி முன்னிலையில் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த பாம்பை ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.