காலியாகும் கனிமவளம்
துணிச்சலில் கேரளா
தூங்குகிறது தமிழகம்
ஜல்லி கருங்கல் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு சேர்ப்பதில் அம்மாநில அரசு துணிச்சலாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் தூங்கிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநிலத்திற்கு தேவையான காய்கறிகள், இறைச்சிக்கான மாடுகள், கோழிகள், முட்டைகள், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உட்பட வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தே கொண்டு செல்லப்படுகின்றன.
காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பால் தமிழகத்தின் தேவைகள் பெரும்பாலும் பூர்த்தி ஆவதால் அண்டை மாநிலத்துக்கு வர்த்தகம் செய்வது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் கருங்கல், ஜல்லி, மணல் போன்ற கனிம வளங்கள் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து சுரண்டப்பட்டு கேரளாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கடத்துவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
இதுபோன்று இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் விளைநிலங்கள் பாதிப்பதாகவும், உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடுமையாக உயர்வதாகவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு நிர்ணயித்த அளவைக் காட்டிலும் அதிக ஆழத்தில் கற்களை வெட்டி எடுத்தல், முறையான ஆவணங்கள் இல்லாமல் கேரளாவுக்கு கொண்டு செல்லுதல், அளவுக்கதிகமான பாரத்தை ஏற்றிச் செல்லுதல் எனப் பல்வேறு விதிமீறல்கள் தொடர்கின்றன.
இந்நிலையில் கேரள மாநிலத்திற்குள் நடைபெறும் ரயில்வே பணிகளுக்கு என பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல் குவாரிகளில் இருந்து பெறப்படும் ஜல்லி கற்கள் டன் கணக்கில் ரயில் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
முறையான ஒப்பந்தங்கள் மூலமே இதைக் கொண்டு செல்வதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தாலும், உள்ளூரில் தட்டுப்பாடு, விலையேற்றம் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு இம்மாநில அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
கனிம வளங்களை பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, தங்களுக்கு தேவையான பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து பெறுவதில் துணிச்சலாக கேரள அரசு செயல்பட்டு வரும் நிலையில், கனிம வளங்கள் கொள்ளை போவதைப் பற்றி கவலை கொள்ளாமல் தமிழக அரசு தூங்குகிறதா என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.