1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்.
மூவர் கைது
பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி வைத்திருந்த 1,308 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் கல்குவாரி ஒன்றில் அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி உத்தரவின்பேரில், கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் நாட்டுக்கல்பாளையம் சென்று அங்குள்ள பொன்னுசாமி என்பவரது கல்குவாரியில் சோதனையிட்டனர். தொடர்ந்து குவாரியை ஒட்டிய விஜய்பாபு என்பவரது தோட்டத்திலும் சோதனை நடத்தினர். இதில் தோட்டத்து கிணற்று மோட்டார் ரூமில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகளும் அதற்கான திரியும் இருந்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த ஜெலட்டின் குச்சிகள் வைத்திருக்க உரிய ஆவணங்களும், அனுமதியும் இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து 1,308 ஜெலட்டின் குச்சிகளையும், 100 அடி நீள திரியையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோமங்கலம் போலீசார் கல்குவாரி உரிமையாளரான கருப்புசாமி மகன் பொன்னுசாமி, தோட்டத்து உரிமையாளரான காளிமுத்து மகன் விஜய் பாபு, குவாரியில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் கஞ்சம் பட்டியைச் சேர்ந்த கனகராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.