போலி உரம் தயாரித்த
குடோனுக்கு சீல் வைப்பு
பொள்ளாச்சியில் அ.தி.மு.க. பிரமுகருக்குச் சொந்தமான தோட்டத்தில் போலி உரம் தயாரித்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் ஊராட்சியில் ஜே.சி. கார்டன் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகரான ராதாகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அவரது தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழைக்கொம்பு நாகூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் கோலப்பொடி தயாரிக்க வாடைக்கு குடோன் அமைத்துள்ளார். ஆனால் அங்கு கோலப்பொடி என்கிற பெயரில் போலியாக உரம் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து பொள்ளாச்சி தாசில்தார் அரசகுமார், தாலுகா போலீசாருடன் அந்த குடோனுக்குச் சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு கோலப்பொடியுடன், கலர் ரசாயனப் பொருட்கள் கலந்து பொட்டாஷ் என்ற பெயரில் போலியாக உரம் தயாரிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் அளித்த தகவலின் வேளாண் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வின் முடிவில் அங்கிருந்த போலி உரத்தை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். தலைமறைவான குடோன் உரிமையாளர் தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.