கோழிக்கறி சமைக்காதது குத்தமா..?
மனைவியை தாக்கிய போலீஸ்காரர்
கோழிக்கறி சமைக்காததால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தனது மனைவியை சுத்தியலால் காலில் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட ஆழியாறு போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிபவர் தலைமைக் காவலர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனை ஒட்டிய காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று போலீஸ்காரர் பிரபு தனது நண்பர்களுடன் மதியம் சாப்பிட வர இருப்பதாகவும் அதற்கு கோழிக்கறி சமைத்து வைக்கும்படியும் அவரது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதியம் வீட்டிற்கு சென்ற பிரபு ஏன் கோழிக்கறி சமைக்கவில்லை என்று மனைவியிடம் கேட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி ஏதோ காரணம் கூற ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் பிரபு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பிரபு வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து அவரது மனைவியின் காலில் பலமாக தாக்கியுள்ளார். வலி தாங்காமல் அவரது மனைவி கூச்சலிட்டது கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
ரத்த காயத்துடன் அழுதுகொண்டிருந்த பிரபுவின் மனைவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள எலும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து போலீசார் அவரிடம் சென்று விசாரித்தபோது, இவர் பல ஆண்டுகளாக கோட்டூர், ஆனைமலை, ஆழியார் என இதே சுற்றுவட்டாரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வேலை பார்த்து வருகிறார். அதனால் இவருக்கு உள்ளூரில் பல தேவையில்லாத நண்பர்களின் சகவாசம் அதிகரித்துவிட்டது.
ஆகவே இவரை வேறு எங்காவது வெளியூருக்கு பணி மாறுதல் செய்யுங்கள் என கண்ணீர் விட்டபடி கதறி உள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.