தண்ணீரில் கண்டம்:
எம்.எல்.ஏ. மீது வழக்கு
குளத்தை பார்வையிடச் சென்றதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்கு பதிவு.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட கோதவாடி கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கோதவாடி குளம். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக்குளம் தற்போதுதான் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
இந்நிலையில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் குளத்தை பார்வையிடுவதற்காகச் சென்றார்.
இத்தகவல் அறிந்ததும் ஏராளமான தி.மு.க. வினர் அங்கு குவியத் தொடங்கினர். பொள்ளாச்சி டி.எஸ்.பி. (பொறுப்பு) சீனீவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்தனர். கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா மற்றும் வருவாய்த் துறையினரும் அங்கு வந்தனர்.
குளம் நிரம்ப காரணமாக இருந்தது போல் அ.தி.மு.க. வினர் இங்கு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது என்று தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எம்.எல்.ஏ. வை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்த போலீசார் எம்.எல்.ஏ. ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. வினரை குளக்கரையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, எம்.எல்.ஏ. ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. வினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. வினர் போலீசில் புகார் மனுவும் அளித்தனர்.
அதனடிப்படையில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன் உட்பட 40 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.