கொசு ஒழிப்பில் கொள்ளை: கவுன்சிலர்கள் ஆவேசம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் கொசுவை ஒழிக்க மருந்து தெளிப்பதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடித்துள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையாளர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் ஒன்றிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி பேசினர். கவுன்சிலர்கள் பேசுகையில், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கொசுவை ஒழிக்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றீர்கள்.
கொசு மருந்துக்கு, கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்களுக்கு, வாகனங்களுக்கு என தனித்தனியே லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறீர்கள். ஆனால் எந்த கிராமத்திலும் கொசு மருந்து அடித்ததாக தெரியவில்லை. கொசு மருந்து தெளிப்பதிலும் கொள்ளையா என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசுகையில், நாங்கள் கேட்கும் கேள்வி உங்களுக்கு புரிவதில்லை, நீங்கள் சொல்லும் விளக்கம் எங்களுக்கு கேட்பதில்லை. ஆகவே அடுத்த கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்களும், அதிகாரிகளும் பேசுவதற்கு மைக் வசதி செய்து கொடுங்கள் என்றனர்.
தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதை அடுத்து பல்வேறு பணிகள் தொடர்பாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.