தாய், மகள் தற்கொலை
பொள்ளாச்சியில் தாயும், மகளும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த தாளக்கரை கிராமத்தில் தனியார் தோட்டம் ஒன்றில் கலாமணி என்பவர் தனது மகள் பிரியாவுடன் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கலாமணியின் கணவர் ரத்தினசபாபதி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
மனவளர்ச்சி குன்றிய மகள் பிரியாவை கலாமணி கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார்.
வயதாகி விட்ட கலாமணி, மனவளர்ச்சி குன்றிய தனது மகளை தனக்குப் பிறகு யார் பார்த்துக் கொள்வார்கள் என்று தோட்டத்தில் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் அடிக்கடி வேதனையோடு கூறி வந்துள்ளார்.
வழக்கமாக காலையிலேயே வேலைக்கு வந்துவிடும் கலாமணி சம்பவத்தன்று வெகுநேரமாகியும் வராததால் உடன் வேலை பார்ப்பவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு கலாமணியும் அவரது மகள் பிரியாவும் இறந்து கிடந்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் இருவரும் இதற்கு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாய், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.