கோவையில் இரட்டை ஆட்சியா..?
ரத்தானது மருத்துவ முகாம்
தமிழகத்தை ஆள்வது தி.மு.க., கோவையை ஆள்வது அ.தி.மு.க. என இரட்டையாட்சி சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி செய்தது. தற்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பல இடங்களில் வென்றிருந்தாலும் கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதியையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.
இதை இரு கட்சித் தலைமையும் எப்படி எடுத்துக்கொண்டாலும் கோவையில் உள்ள இரு கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையே கடும் பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோதவாடி குளத்தில் தண்ணீர் நிரப்பியது யார் என்ற விவகாரத்தில் இருதரப்புக்கு இடையே மோதல் உருவானது. இரு தரப்பும் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த சம்பவத்தின் சூடு அடங்குவதற்குள் அடுத்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அர்த்தநாரிபாளையம் ஊராட்சி. தி.மு.க. வைச் சேர்ந்த குலோத்துங்கன் என்பவர் இந்த ஊராட்சியின் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சி அடங்கியுள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. வைச் சேர்ந்த அமுல் கந்தசாமி. அர்த்தநாரிபாளையம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஆனைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
அதன் பிறகு அங்கு வந்த ஊராட்சி தலைவர் குலோத்துங்கன், மக்கள் பிரதிநிதி ஆகிய நான் வருவதற்குள் முகாமை எப்படி துவக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும் முன்னதாக வந்து சென்ற அ.தி.மு.க. வினர் அங்கிருந்த கலைஞர் மற்றும் முதல்வரின் விளம்பர பலகைகளை அகற்றியதாக ஊராட்சி தலைவர் குலோத்துங்கன் ஆழியார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதேசமயம் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. வைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் குலோத்துங்கன் மருத்துவ முகாமே நடைபெறாமல் தடுத்து நிறுத்திவிட்டார் என்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இவ்வாறு கோவை மாவட்டத்தில் குறிப்பாக பொள்ளாச்சி வட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரு கட்சியின் நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மறைமுகமாகவும், நேரடியாகவும் மோதிக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் புகார் செய்வது அதிகரித்து வருகிறது.
தற்போதைய சூழலில் தமிழகத்தை ஆள்வது தி.மு.க., கோவையை ஆள்வது அ.தி.மு.க. என இரட்டை ஆட்சி நடப்பது போல் உள்ளதாக மக்கள் குமுறுகின்றனர்.