கலாச்சாரத்தை அழிக்க விடமாட்டோம்:
கார்த்திகேய சிவசேனாபதி
பொள்ளாச்சியில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்த கார்த்திகேய சிவசேனாபதி, பீட்டா போன்ற எந்த அமைப்பும் தமிழகத்தின் கலாச்சாரத்தை அழிக்க விடமாட்டோம் என்று தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமத்தூர் மணல்மேடு அருகே ஒன்றிய பொறுப்பாளர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற இந்த ரேக்ளா பந்தயத்தை தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநிலத் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா, ஒமைக்ரான் போன்றவற்றை காரணமாகக் காட்டி ரேக்ளா, ஜல்லிக்கட்டு போன்றவற்றை தடை செய்ய முயற்சிக்கும் பீட்டா அமைப்பை கண்டிக்கிறோம்.
மருத்துவ நிபுணர்கள் என்ற போர்வையில் வலதுசாரி சிந்தனை கொண்ட பீட்டா அமைப்பு தமிழகத்தின் கலாச்சாரம், மொழி, சமூக நீதியை சிதைக்கலாம் என்று நினைக்கிறது. நமது கலாச்சாரத்தை சீரழிக்க நினைக்கும் பீட்டா போன்ற எந்த அமைப்புகளையும் தமிழகத்திற்குள் அனுமதிக்கமாட்டோம்.
2017ல் தைப் புரட்சி என்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் நடந்ததை நினைவூட்ட விரும்புகிறோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், சுற்றுச் சூழலை பேணிக் காக்கவும் தி.மு.க. அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும். ரேக்ளா, ஜல்லிக்கட்டு போன்றவை கிராமங்களைத் தாண்டி சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற பெரு நகரங்களில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக தமிழக முதல்வரை அணுகி முறையான அனுமதி பெறவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் சந்திரமோகன், ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.