ஹெராயின் வழக்கில் தலைமறைவானவர் கைது
ரூ. 21 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் தலைமையிலான தனிப்படையினர் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த
சிலரிடம் நடத்திய விசாரணையில் விலை உயர்ந்த போதைப் பொருளான ஹெராயின் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அண்ணாநகரைச் சேர்ந்த அன்சார் அலி, யோகீஸ்வர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து, டூவிபுரம் இம்ரான்கான், ரோஸ் நகர் அந்தோணி முத்து, நவமணி நகர் பிரேம் (எ) பிரேம்சிங் மற்றும் பட்டினமருதூர் கசாலி ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அண்ணாநகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தலைமறைவானார். இதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பாலமுருகனை கைது செய்தனர். தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா ஜெயக்குமார் பாராட்டினார்.