நகைக்காக பெரியம்மா கொலை
வாலிபருக்கு 2 ஆயுள் தண்டனை
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் நகைக்காக பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் சவுண்டம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி அருக்காணி என்கிற அருக்காத்தாள் சற்று உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி மதியம் அருக்காணி வழக்கம்போல் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது, அவரது தங்கை மகனான ரவிபிரகாஷ் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
கிடைக்கின்ற கூலி வேலைக்கு சென்று வந்த ரவிபிரகாஷ் பெரியம்மா அருக்காணியின் கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்துள்ளார். கட்டிலில் இருந்த பெட்ஷீட்டை எடுத்து பெரியம்மா அருக்காணியின் கழுத்தில் இறுக்கி அவரை கொலை செய்துள்ளார். பிறகு அவர் காதில் இருந்த இரண்டு கிராம் தோடு, கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நைசாக நழுவினார்.
வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பழனிச்சாமி மனைவி இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனைமலை போலீசார் அருக்காணியின் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற்ற ஆனைமலை போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை வேகப்படுத்தினர்.
போலீஸ் விசாரணை தீவிரமானதை அடுத்து பயந்துபோன ரவிபிரகாஷ் அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பெரியம்மா அருக்காணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட ரவிபிரகாஷ், அவரிடமிருந்து எடுத்துச்சென்ற நகைகளில் 2 கிராம் தோட்டை ஒரு வங்கியிலும், 5 பவுன் சங்கிலியை தனியார் நிதி நிறுவனத்திலும் அடகு வைத்ததாகவும், தாலியை மட்டும் மாசாணி அம்மன் கோவில் உண்டியலில் போட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். நகைகளை அடகு வைத்ததில் கிடைத்த ரூபாய் 86 ஆயிரம் பணத்தை வெளியில் தனக்கிருந்த கடன்களை அடைத்ததாகவும் கூறியுள்ளார். நகைகளை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ரவிபிரகாஷ் மீதான குற்றத்தை போலீசார் முறையாக நிரூபித்தனர். இதனையடுத்து நீதிபதி பாலு, ரவிபிரகாஷ் கொலை செய்யும் நோக்கோடு அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறினார். தீர்ப்புக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ரவிப்பிரகாசை போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
2016ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தின் போது ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சோமசுந்தரம். வால்பாறை சரக டி.எஸ்.பி. ஆக இருந்தவர் முத்துராஜ். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தாமல் மெத்தனமாக இருந்ததற்காக இவ்விருவருக்கும் மெமோ வழங்கப்பட்டு, ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவற்றிற்கும் உயரதிகாரிகள் தடை போட்டனர். அதன்பிறகு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற அம்மாதுரை என்பவரே இந்த வழக்கில் தீவிரம் காட்டி, முறையாக விசாரணை நடத்தி, தேவையான ஆவணங்களையும் சேகரித்து சிறப்பாக செயல்பட்டார். குற்றவாளி சிக்குவதற்கும், அவருக்கு உரிய தண்டனை கிடைக்கவும் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை செய்த சிறந்த பணியே காரணம் என உயர் அதிகாரிகள் பாராட்டினர்.