பறிமுதல் மது அழிப்பு
மதுவிலக்கு போலீஸ் நடவடிக்கை
மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான மது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பொள்ளாச்சி நகரம், சுற்று வட்டார கிராமங்கள், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சட்டவிரோதமாக வெளிச் சந்தைகளில் விற்கப்படும் மது, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் பாண்டிச்சேரி இடங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி விற்பனைக்காக கொண்டுவரப்படும் மது ஆகிவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட மதுவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா பிரியா, உதவி ஆய்வாளர் சுரேந்திரன், டாஸ்மாக் உதவி மேலாளர் லட்சுமி, ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.
இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், இந்த ஒரு ஆண்டில் சட்டவிரோதமாக விற்க வைத்திருந்த 12 ஆயிரத்து 79 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிறமாநில மதுபாட்டில்கள் ஆயிரத்து 451ம் அடங்கும்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட மது நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், வெளிமாநிலங்களில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்கவும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.