குடி, கும்மாளம்:
கறார் காட்டுமா காக்கிகள்..?
பொள்ளாச்சியைச் சுற்றி உள்ள ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து, கும்மாளமிடுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள ரிசார்ட்களில் ஆண்டுதோறும் ஆங்கிலப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும். பெரும்பாலான ரிசார்ட்டுகள் முறையான அனுமதியின்றி செயல்படும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் கூடி குடித்து, கும்மாளமிடுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம், மீன்கரை ரோடு, சர்க்கார்பதி ரோடு, டாப்சிலிப் ரோடு மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் ஏராளமான ரிசார்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான ரிசார்ட் உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளின்படி அனைத்து உரிமங்களும் பெறுவதில்லை.
இதனைக் கண்காணிக்க வேண்டிய வருவாய்த் துறை, போலீசார் உள்ளிட்ட அரசுத் துறையினர் மவுனமாகவே இருந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க துணிந்த பொள்ளாச்சி கோட்டத்தின் உயரதிகாரி அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டார். அந்த அளவுக்கு ரிசார்ட் உரிமையாளர்கள் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் ஒன்றுகூடி குடித்து கும்மாளமிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் பொள்ளாச்சி வட்டாரத்தில் உள்ள ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கெடுபிடிகள் அதிகம் என்பதால் கல்லூரி மாணவர்களும், தொழிலதிபர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொள்ளாச்சி போன்ற ஒதுக்குப்புறமாக உள்ள ரிசார்ட்களையே தேர்வு செய்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேத்துமடை அருகே செயல்பட்டு வந்த ஒரு ரிசார்ட்டில் கல்லூரி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி குடித்து, கும்மாளமிட்டதோடு விலை உயர்ந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தினர். இந்த விவகாரத்திலும் உள்ளூர் போலீசார் வழக்கம்போல் மெத்தனமாக இருந்ததால், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸ் படையினர் அதிரடியாக களம் இறங்கி நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் உள்ள ரிசார்ட்டுகள் மட்டும் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல், கட்டுப்பாடுகள் தமிழகம் முழுக்க என்பதை போலீசார்தான் செயலில் காட்டவேண்டும்.
போலீசார் மட்டுமின்றி வருவாய்த்துறையினரும் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்தனர்.