செய்திகள்

இருக்கு.. ஆனா இல்லை…

இருக்கு.. ஆனா இல்லை…

மக்கள் பிரச்சனைகள் ஏராளம் இருந்தும், மன்றக் கூட்டத்தில் பேச கவுன்சிலர்கள் தயாராக இல்லை.
ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இதில் கவுன்சிலர்கள் பேசுகையில், சுகாதார பணிகள் குறிப்பாக கொசு ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும்போது கவுன்சிலர்கள் ஆகிய எங்களுக்கு எந்த தகவலும் தருவதில்லை. சுகாதாரத் துறையினரும் சொல்வதில்லை, ஒன்றிய நிர்வாகமும் சொல்வதில்லை. இனி அதிகாரிகள் இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்.

ஆனைமலை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில், துணைத் தலைவர் மட்டும் இக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை. தலைவர் உட்பட 12 கவுன்சிலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் கூட்டத்தில் ஒன்றிரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே பெயரளவுக்கு ஒருசில பொதுப் பிரச்சினைகளை பேசினர். வழக்கம் போல் இனிப்பு, காரம், காபி முடித்து கவுன்சிலர்கள் புன்சிரிப்புடன் அரங்கை விட்டு வெளியேறினர்.

கூட்டம் குறித்து பார்வையாளராக அமர்ந்திருந்த முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறுகையில், ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் மட்டுமின்றி ஏராளமான பொது பிரச்சனைகளும் உள்ளன.
மக்கள் பிரச்சனைகளை மன்றத்தில் பேசி அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய கவுன்சிலர்கள் ஒன்றிய கூட்டத்தில் ஒப்புக்கு கலந்துகொள்வது வருத்தமாக உள்ளது.
கவுன்சிலர்களும் அதிகமாக கேள்வி கேட்டதில்லை, இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஒன்றிய அதிகாரிகளுக்கும், பிற அரசு துறை அதிகாரிகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சிரமம் இருப்பதில்லை. இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button