காலமுறை ஊதியம்:
கிராம பணியாளர்கள் கோரிக்கை
இரவு பகல் பாராமல் பணியாற்றும் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென கிராமப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கிராம ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்சங்கம்பாளையம் ஊராட்சித் தலைவர் அண்ணாதுரை புதிய முயற்சியாக கிராம ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அதன்படி தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றுக்கு இணையாக கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மாத ஊதியமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பென்ஷன் வழங்க வேண்டும், கிராம பணியாளர்கள் அனைவருக்கும் காலி இடம் வழங்கி இலவசமாக வீடுகளும் கட்டிக் கொடுக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்வதோடு ஆண்டுதோறும் சீருடை, ரெயின் கோர்ட்டுகள் வழங்க வேண்டும், அதிக மக்கள்தொகை கொண்ட ஊராட்சிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய கவுன்சிலர்களான சரஸ் கலாசெந்தில், பாரதி நரசிம்மன், ஊராட்சி தலைவர்களான அங்கலக்குறிச்சி திருஞானசம்பத்குமார், தாத்தூர் அன்னபூரணி, சுப்பேகவுண்டன்புதூர் மோகன், திவான்சாபுதூர் கலைவாணி சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.