இதுவும் இங்கதானா..?
என்னதான் பண்றீங்க..?
கேரளாவிலிருந்து கோழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளைத் தொடர்ந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வீசிச் செல்லும் வேட்டி துண்டுகள் பொள்ளாச்சிக்குள் வரத்துவங்கியுள்ளன.
தமிழகத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், இறைச்சிக்கான மாடுகள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கேரளாவுக்கு வர்த்தக ரீதியில் கொண்டு செல்லப்படுகின்றன.
ஆனால் கேரளாவில் இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும், மண்வளத்தை நாசமாக்கும் அனைத்து கழிவுப் பொருட்களும் தமிழக எல்லையான பொள்ளாச்சி பகுதிக்குள் கொண்டு வந்து கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் அவ்வப்போது லாரிகளில் கொண்டு வந்து பொள்ளாச்சியை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் கொட்டிய சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில் கேரள மாநிலம் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தூக்கி எறியும் வேட்டி, துண்டுகள் மூட்டை மூட்டையாய் லாரி மூலம் பொள்ளாச்சி கொண்டுவரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் வேட்டி, துண்டுகள் இங்குள்ள நீர்நிலைகளில் துவைத்து சுத்தம் செய்து இஸ்திரி போட்டு பேக் செய்து மீண்டும் புதிது போல் விற்பனை செய்யப்படுகின்றன.
பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே அடுத்தடுத்துள்ள மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்த ஒரு நபர் இந்த வேலையில் ஈடுபடுவது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோட்டூர் மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்த நல்லசாமி என்பவர் புரோக்கராக இருந்து இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து நல்ல சாமியை எச்சரித்து, ரூபாய் ஐந்தாயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பழைய துணிகளை உடனடியாக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதனையடுத்து நல்லசாமி பழைய வேட்டி, துண்டுகளை மூட்டையாக கட்டி மீண்டும் லாரியில் ஏற்றிச் சென்றார்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், கேரள மாநிலத்தில் சேகரமாகும் கழிவுகளைக் கொட்டி குவிக்கும் குப்பை மேடாக பொள்ளாச்சியை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற கழிவுகளால் மண் வளம் பாதித்து, நீர்நிலைகள் மாசுபடுகின்றன.
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் மூன்று பிரதான வழித்தடங்களிலும் போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு பணியில் உள்ள போலீசார் வாகன சோதனை செய்வதே கிடையாது. இதனால்தான் இதுபோன்ற அத்துமீறல்கள் அரங்கேறி வருகின்றன. இன்னும் என்னென்ன அபாயகரமான பொருட்கள் பொள்ளாச்சி மண்ணையும், நீர்நிலைகளையும் நாசமாக்க போகிறதோ தெரியவில்லை என்றார்.