ஆறுகளில் கழிவுநீர் கலப்பு
சுத்திகரிப்பு நிலையங்கள்..?
உப்பாறு மற்றும் ஆழியாறு ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் உள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஒடையகுளம் ஆகிய 3 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் உப்பாற்றிலும் அதில் இருந்து ஆழியாறு ஆற்றிலும் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும், ஆறுகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு இத்திட்டம் கிடப்பிற்கு போனதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம் கூறியதாவது, உப்பாறு ஆனைமலையில் ஆழியாறு ஆற்றுடன் கலக்கிறது. 3 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் இந்து கழிவு நீர் உப்பாற்றிலேயே வெளியேற்றப்படுகிறது.
இந்த ஆற்றின் கரையில் பல இடங்களில் மயானங்கள் உள்ளன. அங்கு புதைக்கப்படும் உடல்கள் மழைக்காலங்களில் ஆற்றில் கலக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும் மயானங்களில் இருந்து அனைத்து கழிவுகளும் இந்த ஆற்றில்தான் கலக்கிறது. அதே ஆற்றில் இருந்து மூன்று பேரூராட்சிகளுக்கு குடிநீரும் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பொள்ளாச்சி நகரம், வழியோர கிராமங்கள், குறிச்சி, குனியமுத்தூர் என பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கும் இந்த ஆற்றில் இருந்துதான் குடிநீர் எடுக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண உப்பாறு ஆழியாறு ஆற்றில் கலக்கும் இடம், மாசாணியம்மன் கோவில் பின்புறம் உள்ளிட்ட 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலைங்கள் அமைப்பது என முடிவெடுத்தனர்.
ஆனால் குடிநரீ வடிகால் வாரியத்தினர் இதில் போதிய ஆர்வம் காட்டாததால் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பணியினை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ரூ. 3 கோடியே 20 லட்சம் செலவு பிடிக்கும் என விரிவான அறிக்கை தயார் செய்ததோடு இத்திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவு நீர் கலந்து இரு ஆறுகளும் மாசுபட்டு வரும் நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.