நகராட்சி திடீர் அறிவிப்பு
புலம்பும் தள்ளுவண்டியினர்
பொள்ளாச்சி நகரில் தள்ளுவண்டி கடைகளை போடக்கூடாது என நகராட்சி நிர்வாகம் திடீர் உத்தரவு போட்டதால் வியாபாரிகள் புலம்புகின்றனர்.
பொள்ளாச்சி நகரின் கோவை ரோடு, நியூ ஸ்கீம் ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு மருத்துவமனை எதிரே, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தேர்நிலை, நியூ ஸ்கீம் ரோடு, காந்தி சிலை உள்ளிட்ட இடங்களில் தள்ளுவண்டிகளால் வாகன போக்குவரத்து பாதிப்பதோடு, ரோட்டில் நடந்து செல்வோர் மிகவும் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள அனைத்து தள்ளுவண்டி கடைகளையும் அப்புறப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தள்ளுவண்டி வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த மனுவில் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம், திடீரென கடை போடக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டால் ஒட்டுமொத்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். ஆகவே தொடர்ந்து தள்ளுவண்டி கடை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. வியாபாரிகள் மனு வழங்கும்போது பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன், கோவை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.