வடிவேலுக்கு போட்டியாக நடித்த வாலிபர் கைது
பொள்ளாச்சியில் சூலாயுதத்தை திருடி, வடிவேல் பட பாணியில் சாமி வந்ததுபோல் நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சுந்தரபுருஷன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒரு காட்சியில், கோவிலுக்குள் புகுந்து வேலை திருடுவார். திருடி விட்டு வெளியே வரும் போது, அங்கு திரண்ட மக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சாமி வந்தது போல் நடிப்பார். இந்தக் காட்சி இன்றும் காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
அதே பாணியில் பொள்ளாச்சியில் ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்து சூலாயுதத்தை திருடி, சாமி வந்தது போல நடித்தும் போலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்…
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ளது சேத்துமடை அண்ணா நகர். இங்கு பிரசித்தி பெற்ற உச்சிமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் பூசாரியாக இருக்கிறார். சம்பவத்தன்று பூசாரி குமார் கோவிலின் பிரதான கேட்டைத்திறந்து உள்ளே சென்றபோது, கருவறையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. அவர் வேகமாக உள்ளே சென்ற போது கருவறைக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் அம்மன் கையில் வைத்திருந்த சூலாயுதத்தை திருடிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான பூசாரி குமார், வெளியில் வந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பலர் கோவிலுக்குள் வந்தனர்.
சூலாயுதத்தை திருடிக்கொண்டு வெளியே வந்த அந்த வாலிபர் மக்கள் கும்பலாக நின்றதைப் பார்த்ததும், சுதாரித்துக் கொண்டு சாமியாடினார். நான் தான் அம்மன் வந்திருக்கேன்டா. என்னை எதுவும் செய்யாதீர்கள். நான் கேட்டதை தாருங்கள் என அருள் வந்தவரைப் போலவே நாடகமாடினார். ஆனால் மக்கள் அவன் நடிப்பதை கண்டுபிடித்து விட்டனர்.
குடித்து விட்டு கோவிலுக்குள் சூலாயுதத்தை திருடத்தானே வந்தாய் எனக் கேட்டவாறு அந்த வாலிபரின் அருகே செல்ல முயன்றனர். இதனால் பயந்து போன வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். பொதுமக்கள் தொடர்ந்து விரட்டிச் சென்று அந்த வாலிபரை பிடித்து, ஆனைமலை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பதும், கூலித் தொழிலாளியான அவர் குடிபோதையில் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கையில் இருந்த சூலாயுதத்தை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.