ஆட்சி மாறிடுச்சு:
காட்சியும், காக்கியும் மாறவில்லை
பொள்ளாச்சியில் சில்லிங் மதுவிற்பனையைத் தடுக்காத போலீசார் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரம், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, குஞ்சிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் கோழிப்பண்ணை, கோட்டூர், நா.மூ. சுங்கம், அங்கலக்குறிச்சி, நெகமம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
அரசு உத்தரவின்படி பகல் 12 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. ஆனால் போலீசாரின் ஆசியோடு இரவு 10 மணி முதல் மறுநாள் பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கும் வரை கள்ளச்சந்தையில் மது விற்பனை தங்கு தடையின்றி நடக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பெரும் அளவில் வருவாய் கிடைக்கிறது என்பதற்காகவே அரசு இந்த டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. மக்களின் உயிரைக் குடிக்கும் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடக்கிறது.
கடந்த ஆட்சியில் தான் இந்த அவலம் அரங்கேறி வந்தது. புதிய ஆட்சி வந்த பிறகாவது மாறுதல் ஏற்படும் என எதிர்பார்த்தால் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. குறிப்பாக கள்ளச்சந்தையில் மது விற்பனை தான் தற்போது தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
இதனைத் தடுக்க வேண்டிய டாஸ்மாக் நிர்வாகம், மதுவிலக்கு பிரிவு போலீசார், உள்ளூர் போலீசார், தனிப்பிரிவு, உளவுப் பிரிவு போலீசார் என அனைத்து தரப்பினரும் மவுனமாக இருப்பது பொது மக்களை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
சாதாரண பிரச்சனைகளுக்காக போலீஸ் ஸ்டேஷன் செல்லும் பாமர மக்களிடமும், பொது இடங்களில் விதிகளை பின்பற்றாத அப்பாவி வாகன ஓட்டிகளிடமும் விறைப்பு காட்டும் போலீசார், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் மட்டும் சரண்டர் ஆகிவிடுகின்றனர். இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.