பின்னலாடை உற்பத்தியாளர் 2 நாள்
வேலைநிறுத்தம்
பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் 2 நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டம்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது,
பின்னலாடைத் துறைக்கு புத்தாண்டு சோதனையான கால கட்டமாக துவங்கி உள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு, அட்டைப் பெட்டியின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு நடுவே பின்னலாடைத் தொழில் துறையினர் செயல்பட்டு வரும் நிலையில் நூல் விலை உயர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சு ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்வதோடு, பஞ்சு இறக்குமதி மீதான 11 சதவிகித வரியை ரத்து செய்ய வேண்டும்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியை பதுக்கி செயற்கையான தட்டுப்பாடு சூழ்நிலையை உருவாக்கி பஞ்சு விலையை உயர்த்தும் பதுக்கல்காரர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது போட்டியாளர்களான சைனா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2 மாதத்தில் மட்டும் நூல் விலை கிலோவுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் பல கட்டங்களாக உயர்ந்த நூலின் விலை பின்னலாடை தொழில் துறையினரை கடுமையாக பாதித்துள்ளது.
பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப் பெற்று வரும் ஜவுளித்துறையை பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வருகிற 17 மற்றும் 18ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
ஒமிக்ரான், கொரோனா போன்ற பெரும் தொற்றுகளால் திருப்பூருக்கு வரும் வெளிநாட்டு வர்த்தக ஆர்டர்களில் பாதிப்பில்லை. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.