விவசாயிகள் விழிப்புணர்வுக்கென 2 நாள் கருத்தரங்கு
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வுக்கென 2 நாள் கருத்தரங்கு நடைபெறுகிறது.
விவசாய பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிய விவசாயிகள் விழிப்புணர்வுக்கென 2 நாள் கருத்தரங்கத்திற்கு பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்தது. பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இக்கருத்தரங்கின் துவக்க விழா அபேடா தலைவர் மாதையன் அங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஜே.டி. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கருத்தரங்கின் நோக்கம் குறித்து பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் விளக்கம் அளித்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டு பேசுகையில், இக்கருத்தரங்கின் மூலம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 850 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைய உள்ளனர். விவசாய கண்காட்சி, கருத்தரங்கு ஆகியவை அடிக்கடி நடப்பதுண்டு. ஆனால் இதுபோல் விவசாயிகளை தொழில்முனைவோராகவும், ஏற்றுமதியாளர்களாகவும் மாற்றுவதற்கான இந்த கருத்தரங்கம் ஒரு நல்ல முயற்சியாகும்.
பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் இதில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தேவையான விளக்கங்களை அளிக்க உள்ளனர். விவசாயிகள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள், விவசாயத்தில் முழுமூச்சோடு ஈடுபடுங்கள், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் மாறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
கருத்தரங்கு துவக்க விழா நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை (வணிகம்) இணை இயக்குனர் ஸ்ரீதர், பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், டாக்டர். மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழில் வர்த்தக சபை இணைச்செயலாளர் எம்.கே.ஜி. ஆனந்த் குமார் நன்றி கூறினார்.