செய்திகள்

தயார் நிலையில் 4,300 படுக்கைகள்

கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் 4,300 படுக்கைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 4,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கென 250 படுகைகள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக 250 படுக்கை வசதி செய்யவும் புதிய கட்டிடத்தில் இடவசதி உள்ளது.
கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகள், இஎஸ்ஐ மருத்துவமனையில் 350 படுக்கைகள், கொடிசியா வளாகத்தில் 350 படுக்கைகள் என மாவட்டம் முழுவதிலும் 4,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பாரதியார் பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் தயார் நிலையில் உள்ளோம். ஆக்சிஜனை பொருத்தவரை தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் மிக முக்கியம். வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை முதல் முதல் டோஸ் தடுப்பு ஊசி 96 சதவீதம் பேர் போட்டுள்ளனர். இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசி 78 சதவீதம் பேர் போட்டுள்ளனர். இதனை 96, 98 சதவீதம் வரை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வணிக வளாகங்கள், பொது மக்கள் கூடும் இடம் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப் படுகின்றனவா என்று தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button