பாலியல் புகார் எதிரொலி: பழங்குடியின சிறுமிக்கு மருத்துவ பரிசோதன
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாலியல் புகாருக்கு ஆளானதாக கூறப்படும் பழங்குடியின சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு தலைவர் வி.எஸ். பரமசிவம், தமிழக முதல்வருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். அதில், கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வன கிராமத்தில் கடந்த புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி பழங்குடியின சிறுமி ஒருவரை மர்ம நபர்கள், மயக்க மருந்து கொடுத்து வனத்திற்குள் தூக்கிச்சென்று, பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் வனப்பகுதியிலும், போலீசார் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வால்பாறை சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
சிறுமியின் பெற்றோர், உறவினர்களிடம் வால்பாறை சரக காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னக்காமனன், செல்வராஜ், கார்த்திக் குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.