ஒற்றை காட்டு யானை உலா: மலைவாழ் மக்கள் அச்சம்
பொள்ளாச்சி அருகே உலாவரும் ஒற்றை காட்டு யானையால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்டது சின்னார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி. ஆழியார் அணையை ஒட்டியுள்ள இக்குடியிருப்பு பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் தேக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை இக்குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் உலா வருகின்றது. உணவுக்காக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் மலைவாழ் மக்கள் அச்சத்துடன் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். தங்கள் வீடுகளை யானை சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தீ மூட்டி இரவு முழுக்க காவல் காக்கின்றனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.