குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி
சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகை
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சப் – கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் இரவு வரை நீடித்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மக்கள் சக்தி நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஹரிஹரசுதாகர் அதே பகுதியைச் சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரிடம் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த மதுரையைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவரை காதலித்துள்ளார். இது தெரி்ந்ததும் மேஜர் ராமசாமி, ஹரிஹர சுதாகரை வேலையை வி்ட்டு நிறுத்தி விடுகிறார். தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். இதனால் இருவரிடமும் இருந்து மேஜர் ராமசாமி செல்போனை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலியைப்பார்க்கச் சென்றுள்ளார் ஹரிஹர சுதாகர். அப்போது மேஜர் ராமசாமியிடம் பணியாற்றுவோர் ஹரிஹர சுதாகரை கை, கால்களை கட்டி தோப்பிற்குள் கொண்டு சென்று சகட்டு மேனிக்கு அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். உடல் முழுக்க காயங்களுடன் ஹரிஹர சுதாகர் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் கேசவன், காளிமுத்து, ராமன், மேஜர் ராமசாமி மற்றும் ராசாத்தி என்கிற பெண் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.மேஜர் ராமசாமியின் தூண்டுதலின்பேரிலேயே இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்வதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று சப்-கலெக்டர் அலுவலகம் வந்தனர்.அங்கு நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஹரிஹர சுதாகரை தாக்கிய மேஜர் ராமசாமி மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வால்பாறை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவு வரை செல்போன் வெளிச்சத்தின் துணையோடு இப்போராட்டம் நீடித்தது.