ரூ. 185 கோடி எங்கே? கோவை மாநகராட்சியின் கோல்மால்
மத்திய, மாநில அரசுகள் கோவை மாநகராட்சிக்கு ஒதுக்கிய நிதியில், 185 கோடி ரூபாயை, வேறு பணிகளுக்கு மாற்றி செலவிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாநகராட்சி ஆண்டுதோறும், சொத்து வரியாக மட்டும் ரூ. 250 கோடி வசூலிக்கிறது. குடிநீர் கட்டணம், வரியில்லா ஏலம், குத்தகை, வாடகை இனங்கள் உள்ளிட்ட வகையில் ரூ. 500 கோடி வரை வருவாய் ஈட்டுகிறது. மத்திய – மாநில அரசுகள் வழங்கும் நிதி மானியம் மற்றும் திட்டங்கள் மூலமாக கிடைக்கும் நிதியைக் கொண்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போதைய சூழலில் 240 கோடி ரூபாய் வரையிலான வேலைகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் நிலுவை வைத்திருக்கிறது. ரூ. 160 கோடி மதிப்பிலான பணிகளை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் கணக்குப்பதிவேடுகளை ஆய்வு செய்ததில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சிக்கு மத்திய – மாநில அரசுகள் வழங்கிய நிதியில், ரூ. 185 கோடியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், வேறு வகையில் முறைகேடாக செலவிட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறிப்பாக 5வது மாநில நிதி ஆணையம் வழங்கியதில், 6 கோடி ரூபாய் என்னானது என்றே தெரியவில்லை.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய – மாநில அரசுகள், கோவை மாநகராட்சிக்கு ரூ. 357 கோடி ஒதுக்கி உள்ளன. ரூ. 325 கோடி மானியமாக விடுவித்ததில், ரூ. 310 கோடி பெறப்பட்டுள்ளது. இதில் 185 கோடி ரூபாயை, ஒதுக்கிய திட்டங்களுக்கு செலவழிக்காமல், அப்போதயை அதிகாரிகள் நிதியை வீணடித்திருப்பது தெரியவந்துள்ளது.