டாப்சிலிப்பில் யானைகள் பொங்கல்
விழா
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் டாப்சிலிப்பில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி யானைகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. முகாமில் 9 பெண் யானைகள் உட்பட 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி யானைகள் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரொனா வேகமாக பரவி வரும் சூழலிலும் இந்த ஆண்டு யானைகள் பொங்கல் விழா டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கொண்டாடப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு துணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார்.
கோழிக்கமுத்தியில் மலைவாழ் மக்கள் சார்பில் 7 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. அதன் பிறகு பொங்கல், கரும்பு, வெல்லம், தேங்காய், பழம் ஆகியவை வாழை இலையில் படையலிட்டு, அலங்கரிக்கப்பட்ட யானைகளுக்கு வழங்கப்பட்டன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையிலும், யானைகள் பொங்கல் விழாவை கண்டு களிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் அதிகளவில் அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்களும் முகக்கவசம் அணியவில்லை.