வளர்ப்பு யானை மிதித்ததில் – பாகன் பலி
பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் வளர்ப்பு யானை மிதித்ததில் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. முகாமில் 9 பெண் யானைகள் உட்பட 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதில் அசோக் என்கிற 14 வயதான குட்டி ஆண் யானை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்
பூங்காவில் இருந்து டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை மாவுத் எனப்படும் பாகன் ஆறுமுகம் பராமரித்து வந்தார்.
காலை 8:30 மணி அளவில் வழக்கம்போல் உணவு அளித்ததும் அசோக் யானையை பாகன் ஆறுமுகம் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார். சிறிது தூரம் சென்றதும் யானையின் பாதத்தில் சங்கிலியால் கட்ட ஆறுமுகம் முயற்சித்துள்ளார். அப்போது திடீரென மூர்க்கமான யானை அசோக், முன்னங்காலால் பாகன் ஆறுமுகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் கூச்சலைக் கேட்டு சகபணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு குடல் வெளியே சரிந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாகன் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் யானை பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் வனத்துறையினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.