ஆதரவற்றோருக்கும் தடுப்பூசி: நேதாஜி இளைஞர் பேரவை வலியுறுத்தல்
ஆதரவற்றவர்களுக்கும், ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் சாலையோரங்களில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றவர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் உணவு, குடிநீர், முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் தலைமையில் பேருந்து நிலையம், காந்தி சிலை, தேர் நிலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதரவற்றோருக்கு இன்றும் உணவு வழங்கப்பட்டது.
மேலும் ஆதரவற்றவர்களுக்கு உடல் வெப்பநிலை பார்க்கப்பட்டு, பெயர், முகவரி, தடுப்பூசி செலுத்தாத நபர்கள் குறித்து பட்டியல் எடுக்கப்பட்டது. அதில் ஆதார் அட்டை இல்லாததால் பலரும் தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவந்தது. ஆகவே மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும், ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரவை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.