புகையுது பாகன் இறப்பு விவகாரம்
வளர்ப்பு யானை மிதித்து பாகன் பலியானது அதிகாரிகளின் அலட்சியத்தாலே என்று புகார் எழுந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில் யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் என்கிற ஆண் யானை மிதித்ததில் அதைப் பராமரித்து வந்த பாகன் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது, கோழிக்கமுத்தியில் யானைகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அன்று மாலை யானை அசோக்கிற்கு லேசாக மதம் பிடித்தற்கான அறிகுறிகள் தென்பட்டன.
இதனை பாகன் ஆறுமுகம் அதிகாரிகளிடம் தெரிவித்து, அசோக் யானையை கரோல் எனப்படும் மரக்கூண்டில் அடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அதிகாரிகளோ, இரண்டொரு நாள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக பதில் கூறிவிட்டனர். அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் அடுத்த நாளே இந்த துயர சம்பவம் நடந்தது.
கரோல் எனப்படும் மரக்கூண்டு கோழிக்கமுத்தியில் இருந்து சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள வரகழியாறில் மட்டுமே உள்ளது. யானைகள் முகாம் உள்ள கோழிக்கமுத்தியிலேயே மரக்கூண்டு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பாகன்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அதிகாரிகள் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.