தனியாருக்கு சேவை புரிந்த அரசு பஸ் சிறைபிடிப்பு
தனியார் பஸ்ஸில் ஏறுமாறு வற்புறுத்திய அரசு பஸ்சை பொள்ளாச்சியில் பெண்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 11 B அரசுப் பேருந்து காளியாபுரம் செல்வதற்காக பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்பொழுது வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பேருந்தில் ஏற முற்பட்டனர். அப்போது ஆறு பெண்களை மட்டும் அரசு பேருந்தில் ஏற்றி விட்டு மீதமுள்ள பெண்களை பின்னால் வரும் தனியார்பேருந்தில் ஏறுமாறு நடத்துனர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் பேருந்தில் ஏறிய பெண்கள், வேட்டைக்காரன்புதூர் திரும்பி வந்த அந்த அரசு பேருந்தை சிறைபிடித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த தி.மு.க. வினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அரசு பேருந்து நடத்துனர், தனியார் பேருந்துகள் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.